Gender school and society
Paper-6
Gender school and society
ஆண்களையும், பெண்களையும் நெறிப்படுத்தும் உத்திகளின் செயல்பாடுகள் ஒழுக்கம் :
மாணவ,மாணவிகளை ஒழுக்கப்படுத்துதல் அல்லது நெறிப்படுத்துதல் என்பது எத்தகைய நடத்தை ஏற்றுக் கொள்ளப்படும், எவை ஏற்கப்படா என்பதைக் கற்றுக் கொடுத்தலாகும். அதாவது 'ஒழுக்கம்' என்பது, மாணவர்கள் சட்டதிட்டங்களை மதித்து நடத்தலாகும்.
ஆண்களையும், பெண்களையும் நெறிப்படுத்தும் உத்திகள்:
வகுப்பறையில் மாணவர்களும், மாணவிகளும் வெவ்வேறு வழிகளில் நெறிப்படுத்தப்படுகிறார்கள். பொதுவாக மாணவர்கள் மாணவிகளை விட கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் நடத்தைப் பிரச்சினைகள் உடையோரது பட்டியலில் மாணவர்கள் பெயர்களே அதிகம் இடம் பெறுகின்றன. பொதுவாக வகுப்பறையில் பெண்கள் அதிகமாக தமக்குள் பேசிக் கொண்டிருத்தலுக்காகவும், ஆசிரியர் கேட்கும் வினாக்களுக்கு மற்றவர்களை முந்திக் கொண்டு விடையளிக்க முயல்வதற்காகவும் தண்டிக்கப்படுகிறார். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் மாணவர்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஆண்களையும், பெண்களையும் நெறிப்படுத்தும் உத்திகளின் செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(1)சிறந்த நடத்தையைக் கண்டறிந்து பரிசளித்தல்:
குழந்தைகளின் சிறந்த நடத்தைகளைக் கண்டறிந்து பாராட்டி பரிசளித்தலே, அவற்றை தொடர்ந்து நீடிக்கச் செய்வதை ஊக்குவிக்கும் உத்தியாகும். வேறு சொற்களில் கூறினால், குழந்தை நன்கு நடந்து கொள்ளும் போது உடனடியாக அந்தக் கணமே பாராட்டினால், அது அத்தகைய நடத்தையை குழந்தை அடிக்கடி வெளிப்படுத்தத் தூண்டும்.
(2)இயற்கையான பின்விளைவுகளை அனுபவிக்கச் செய்தல் :
நமது எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தாம் நினைத்த படி நடந்து கொள்ளும் குழந்தையை அதன் போக்கில் விட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிப்பதன் மூலம் குழந்தை தானே தன்னை சீர்திருத்திக் கொள்ளும். ஆனால் குழந்தையின் நடத்தையால் ஏற்படும் பின்விளைவு அதிக அபாயம் இல்லாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
(3)தர்க்க ரீதியான பின் விளைவுகள் :
இந்த உத்தி, இயற்கையான பின்விளைவுகளை அனுபவிக்கச் செய்தலைப் போன்றதேயாகும். ஆனால் ஏற்கத் தகாத நடத்தைகளின் பின்விளைவுகளைப் பற்றி குழந்தைக்கு விரிவாக எடுத்துச் சொல்லுதல் இவ்வுத்தியில் உள்ளடங்கும். பின்விளைவு, நடத்தையோடு நேரிடையாகத் தொடர்புபடுத்தப்படும். உதாரணமாக குழந்தை தான் விளையாடி முடித்த பொம்மை முதலான விளையாட்டுப் பொருட்களை பொறுக்கி எடுத்து மீண்டும் பாதுகாப்பாக வைக்கத் தவறினால், குழந்தைக்கு ஒரு வார காலம் விளையாட்டுப் பொருட்கள் தரப்படமாட்டாது என்று எச்சரித்திடலாம்.
(4)சலுகைகளை நீக்கிடல் :
சில சமயம் ஒரு குறிப்பிட்ட மோசமான நடத்தைக்கு உரிய இயற்கையான அல்லது தர்க்கரீதியான பின்விளைவு இல்லாதிருக்கலாம்; அல்லது அதனைக் கண்டறிவதற்குத் தேவைப்படும் நேரம் நமக்கு இல்லாமலிருக்கலாம். இந்நிலையில், மோசமான நடத்தையின் பின்விளைவாக, குழந்தைக்கு அளிக்கப்படும் சலுகைகளில் சிலவற்றை நீக்கிடலாம். உதாரணமாக நடுநிலைப் பள்ளி வகுப்பில் படிக்கும் மாணவர், தனது வீட்டு ஒப்படைப்பை உரிய நேரத்தில் செய்து முடிக்கத் தவறினால், ஒரு வாரத்திற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்பதற்குத் தடை விதிக்கலாம். ஆனால் இவ்வுத்தி பின்வரும் சூழல்களில் மட்டுமே பயனளிக்கும்.
•அனுமதிக்கப்படும் சலுகை, குழந்தை வெளிப்படுத்தும் நடத்தையோடு ஏதோவொரு வகையில் தொடர்பு கொண்டிருத்தல்.
•குழந்தையால் அதிக மதிப்புள்ளதாகக் கருதப்படல்.
Comments
Post a Comment